மதவாதிகளின் சொல்லுக்கு மாற்றுக் குரல் எழாத தேசங்களெல்லாம் பிற்போக்குத் தனத்தின் கூடாரமாகவே திகழும். இதற்கு எத்தனையோ நாடுகளை உதாரணம் காட்டலாம்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் கோம் மற்றும் போருஜெர்ட் பகுதியில் சில மாதங்களாக மாணவிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட, அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவ ஆய்வில், அவர்களது உடலில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கு எதி ராக உலக அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஈரானில் உடை கட்டுப்பாட்டு விஷயங் களைப் பின்பற்றாத மாஷா அமினி என்ற இளம் பெண் 2022, செப்டம்பர் 16-ஆம் தேதி கலாச்சார காவல்துறையால் அடித்தே கொல்லப்பட்டார். இதையடுத்து நாடெங்கும் மாஷா அமினிக்கு ஆதரவாகப் போராட்டம் எழுந்தது. போராட்டத் தில் கலந்துகொண்ட பெண்கள் தங்கள் ஹிஜாப் பைக் கழற்றியெறிந்தனர். ஆயிரக்கணக்கானவர் களை சிறையிலடைத்தது அரசு. சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிச் சூட்டிலும், வேறு வகையிலும் கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பள்ளிசெல்லும் மாணவிகளும் ஆயிரக்கணக்கில் களத்திலிறங்க, திகைத்துப் போனது ஈரான் அரசு. போராட்டத்தை அடக்கமுடியாத ஈரான் நய வஞ்சமாக, உடை கட்டுப்பாட்டு விஷயங்களைத் தளர்த்துவதாகக் கூறி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. போராட்டங்களில் பங்குபெற்ற பலரையும் அதன்பின் கைதுசெய்து சிறையி லடைத்துவருகிறது. பல்லாயிரக்கணக்கான பேர் மீது விசாரணை நிலுவையில் இருக் கிறது. பெண்கள் கல்வி கற்பதால்தான் இத்தகைய புரட்சி மனப்பான்மை வருகிறதென ஈரான் அடிப்படைவாதிகள் நினைத்தார்களோ என்னவோ, பள்ளி செல்லும் மாணவிகளுக்கு சில அடிப்படைவாதிகள் விஷம் வைத்திருக்கின்றனர். இதனை ஈரான் துணை கல்வியமைச்சர் யூனூஸ் பனாஹி உறுதிசெய்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் களில் ஒருவர், “"அத்தனை தீவிரமில்லாத ஆர்கனோ பாஸ்பேட் பொருளை எப்படியோ மாணவிகளுக்கு கலந்துகொடுத்திருக்கிறார்கள். இது எச்சில் சுரப்பை அதிகப்படுத்தும், வாந்தி பேதி உண்டாக்கும், வயிற்றுவலியை ஏற்படுத்தும். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்தும் நோக்கில் தீவிரவாத இஸ்லாமியர் கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம்'' என்றி ருக்கிறார். ஈரான் ஆசிரியர்களில் ஒருவர், "கோம் பகுதியில் 250 மாணவர்களில் 50 மாணவர்களே பள்ளி வந்திருக்கிறார்கள். அதிகளவில் மாணவிகள் சுகவீனமானதால் அவர்களது பெற்றோர்கள் கவர்னர் அலுவலகத்துக்கு வெளியே விளக்கம் கேட்டு பேரணி நடத்தினர். இதன் காரணமாக சில மகளிர் பள்ளிகள் மூடிக் காணப்படுகின்றன'' என்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள், "அரசோ, அரசு சார்பான அமைப்புகளோ விசாரித்தால் உண்மை வெளிப்படாது. ஐ.நா.வோ அல்லது அரசுசாராத அமைப்புகளோ இந்த நிகழ்வை விசாரிக்க வேண்டும்''’என்கிறார்கள்.
மாணவிகளுக்கு விஷம் வைக்கத்தான் மதம் கற்றுத் தந்திருக்கிறதா?